“கோவை ராகிங் விவகாரம்: ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை” – நீதிபதி காட்டம்!

கோவை தனியார் கல்லூரியில் ராகிங் விவகாரம், 8 மாணவர்கள் மீதான ராகிங் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து…

கோவை தனியார் கல்லூரியில் ராகிங் விவகாரம், 8 மாணவர்கள் மீதான ராகிங் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள், மதுபானம் வாங்க பணம் தரவில்லை எனக் கூறி, அதே கல்லூரியில் படித்த ஜூனியர் மாணவரை மொட்டையடித்து, விடுதி அறையில் பூட்டி ராகிங் செய்ததாக பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் அடிப்படையில் ராகிங் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 8 மாணவர்களும் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது தந்தையும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கோரியதாகவும், எந்த நிர்பந்தமும் தரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, 8 மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராகிங் செயல்களில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்கு செல்ல வேண்டிய நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியதுடன், ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை என தெரிவித்தார். 

பள்ளியில் படித்த திருக்குறளை வாழ்க்கையில் பின்பற்றாவிட்டால் அதை படித்து என்ன பயன்? என குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதி, படிக்க வைப்பதற்காக பெற்றோர் படும் கஷ்டத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், மனிததன்மையற்ற ராகிங் செயலால் மற்றவரை துன்புறுத்துவதன் மூலம் இன்பமடையவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.