சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சினை ஏற்படும் வகையில் தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவையில் நடந்த அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து கண்காணித்து வருவதாகவும், அதில் ஒரு சில வழக்குகளில் குற்றவாளிகள் குறித்து ஓரளவு தெரியவந்துள்ளது.
இதனை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் இரு சமூகத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்படும் வகையில் தகவல்களை பகிர்ந்தால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேபோன்று, அமைதிக்கு இடையூறு விளைவிக்க கூடிய செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கோவை மாநகர் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். எல்லை சோதனை சாவடிகள் மற்றும் நகருக்குள் வரக்கூடிய அனைத்து நபர்களையும் கண்காணிக்க கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 28 புதிய தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக ரோந்து பணிகள் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.







