கண்ணீருக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்பார்கள். வெற்றி, தோல்வி, ஏமாற்றம், ஆச்சரியம் என எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை எதிர்பாராமலும், எதார்த்தத்தின் அடிப்படையிலும் வருவது தான் கண்ணீர். அப்படிப்பட்ட கண்ணீர் கதை பேசி பார்த்ததுண்டா? ஆம் என்றால் அது இன்றைய பொழுதின் விடியலாக தான் இருக்க கூடும்.
லண்டனில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற லெவர் கப் டென்னிஸ் தொடரின் ஹார்ட் கோட் மைதானத்தில் தான், இந்த ஹார்ட் ஃபெல்ட் சம்பவம் அரங்கேறியது. தனது 41 வது வயதில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பெட் எக்ஸ்பிரஸ் எனும் ரோஜர் பெடரர், தனது டென்னிஸ் வாழ்கையில் கடைசி போட்டியை, தன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் “எதிரி” நண்பனான ரபேல் நடாலுடன் ஜோடியாக சந்தித்தார். 
பிரான்சிஸ் டியாபோ, ஜாக் சாக் இணையுடன் விளையாடிய நடால், பெடரர் இணை 2-1 என்ற செட் கணக்கில் தோல்வியுற்ற அடுத்த நொடி முதலே, கண்ணீர் கடலில் மூழ்கியது அந்த அரங்கம். தனது இறுதிப் போட்டியை விளையாடி முடித்த பெடரர் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு, கையசைத்தபடி மைதானத்தை வலம் வந்த பின் வர்ணனையாளர் அவரை பேச அழைத்தார்.
தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவாரு பேச தொடங்கிய பெடரர், ஒரு கட்டத்தில் கண்ணீர் விட ஆரம்பித்தார். ஒவ்வொரு உணர்வுபூர்வமான வார்த்தைகளை பகிரும் போதும், தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார். ஒவ்வொரு வெற்றி, தோல்விக்கு பிறகும் எதார்த்தமான தருணங்களை பகிர்ந்த பெடரருக்கு, இந்த முறை பதட்டத்துடன் கூடிய ஒரு வகையான வார்த்தை நடுக்கமே தொடர்ந்தது. 
அண்மைச் செய்தி – விராட் கோலி பகிர்ந்து உருக்கமான படம்
அப்போது கண்ணீருடன் பேசிய ஃபெடரர், “எனக்கு உற்சாக மூட்ட ஏராளமானோர் திரண்டுள்ளனர். எனது குடும்பமும் இங்கு உள்ளது. பல ஆண்டுகளாக எனக்கு எனது மனைவி ஆதரவைத் தந்து வருகிறார்.
முன்னரே என்னை விளையாடுவதில் இருந்து அவர் தடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் என்னை விளையாட அனுமதித்தார். எனது தாயார் இன்றி நான் இல்லை.
எனது பெற்றோருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் ” என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.
Legend. @rogerfederer | #RForever | @LaverCup | #LaverCup pic.twitter.com/TEkxmUvltA
— ATP Tour (@atptour) September 23, 2022
பெடரர் இன்றுடன் ஓய்வு பெறுவதை நினைவில் கொண்ட, அவரது நண்பரான ரபேல் நடாலாலும் கூட தன் உணர்வுகளை துளி அளவு கூட கட்டுப்படுத்த இயலாமல், ஒரு கட்டத்தில், நெருக்கமான ஒரு இதயம் நம்மை விட்டு வேறொரு நோக்கத்திற்காக எங்கேயாவது செல்லும் போது, அவருடன் நம் வாழ்வில் நடத்த எல்லா தருணங்களையும் நினைவுகூர்ந்து நம்மை அறியாமல் அழுவது போல, பெடரரை பார்த்து பார்த்து அழுதார் நடால். 
மைதானத்தில் கையசைத்தபடி வலம் வந்த பெடரர், தன் சக வீரர்களான ஜோகோவிச், நடால், உள்ளிட்ட யூரோப் அணியினரை அழைத்து, தோல் மேல் கை கோர்த்த படி, இருபுறமும் உள்ள ரசிகர்களை பார்த்து, நான் விடைபெறுகிறேன் என கையசைத்தார். அதன் பின் அரங்கேறியது தான் பெடரர் மற்றும் நடாலின் ரயில் பயணம்.
பெடரர் ஓய்வை முன்னிட்டு தாயரிக்கபட்ட ஒரு வாழ்க்கை படத்தை, அதே நேரத்தில் திரையிட்டனர். அதில் பெடரரின் மறக்க முடியாத மற்றும் மறைக்க முடியாத சாதனைகளும், நினைவலைகளும் இடம் பெற்றதை அடுத்து, அதனை கண்டு தன்னால் தாங்க முடியாத பெடரர், நடாலின் கையை பிடித்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நாடாலும் பெடரர் போலவே உணர்ச்சி பொங்க அழ ஆரம்பித்தார். அதாவது பெடரர் நடால் மத்தியிலான நினைவுகள் என்பது, 90 களில் தொடங்கி, இன்றுடன் முடிவதை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிலான தருணங்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை என்பதற்கு அந்த அழுகையே சாட்சி. 
இருவரும் விளையாடிய போட்டிகள் எத்தனை , இருவருக்கும் இடையேயான நட்பு என்ன? போட்டியில் இருவருக்குமான ஒற்றுமை என்பதை விளக்கியிருக்கும், இருவரின் அனுபவங்களும் டென்னிஸ் உலகிற்கு அத்துணை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்க கூடும் என்பதை கண்ணீர் மூலமே புரிந்துகொள்ளும் காட்சியே முற்றிலுமாக அங்கு அரங்கேறியது.
ஃபெடரர் இந்த தொடருடன் ஓய்வு பெற்றது குறித்து நடால் பேசிய போது கூட, “ரோஜர் இந்த தொடரை விட்டு வெளியேறும்போது, ஆம், என் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியும் வெளியேறுகிறது, ஏனென்றால் அவர் என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் எனக்கு அடுத்ததாகவோ அல்லது எனக்கு முன்னால் இருந்த அனைத்து தருணங்களும் முக்கியமானவை. ஆம், இதனை விவரிப்பது கடினம்” என்று பேசினார்.
அத்தைகைய முக்கியமான ஒரு நபராக ரோஜர் பெடரர், ரபேல் நடாலுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். இரு ஜாம்பவான்களின் கனவுகளும் ஒரே பாதையில் சீராக நிறைவேறிய போது வந்த கண்ணீரை காட்டிலும், தற்போது தொடர்வதில் ஒருவர் மட்டுமே நிஜத்திலும், இன்னொருவர் நிழலிலும் இருக்கப் போகிறார் என்பதை அந்த கண்ணீர் வெளிப்படுத்துகிறது. 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கூட, நடாலும் ஃபெடரரும் கண்ணீருடன் இருக்கும் படத்தைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அண்மையில் அமெரிக்க ஓபனில் இளம் வயதில் வென்று சாதனை படைத்தவரும் சர்வதேச தர வரிசையில் முதலிடத்தில் வகிப்பவருமான கார்லோஸ் அல்கரஸ் கூட கண்ணீரைப் பொழியவிடும் எமோஜியைப் பதிவிட்டு தமது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார்.
😭😭😭
— Carlos Alcaraz (@carlosalcaraz) September 23, 2022
ஒட்டுமொத்த அரங்கமும் ஒற்றை மூச்சாய், ரோஜர் பெடரருக்கு பிரியாவிடை பரிசாக கண்ணீரை கொடுத்து வழியனுப்பி வைத்த தருணம் மட்டுமே, இந்த தலைமுறைக்கான உட்சபட்ச, விலைமதிப்பற்ற, நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. டிவிட்டர் ஸ்போர்ட்ஸ்-சும் கூட இன்னொரு ரோஜர் ஃபெடரர் இல்லை என்று பதிவிட்டுள்ளது. நினைவுகளளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளது.
There will never be another #RogerFederer
Thanks for the memoriespic.twitter.com/13OrRgmbZF
— Sports (@Sports) September 23, 2022
இன்று ரோஜர், நாளை நடால் என வெற்றிக்காக காத்திருந்த கண்கள், இன்று பிரியாவிடை புத்தகத்தில் ரோஜர் பெடரரின் பெயரை எழுதி வைத்துள்ளன. நடாலின் பெயருக்கான இடைவெளி விட்டு வைத்திருக்கின்றன. அடுத்ததாக நடாலின் ஓய்வை ஏற்றுக்கொள்ளவும், கனத்த இதயத்துடன் காத்திருக்கிறது டென்னிஸ் உலகம்.
இப்போதைக்கு ஜாம்பவான்களின் பல்கலைக்கழகத்தில், ஓர் அருங்காட்சியகமாக மாறி வருங்கால சந்ததியினருக்கு ஃபெட் எக்ஸ்பிரஸ் – ஸாக டென்னிஸ் வரலாற்றில் ஒரு காவியமாக மாறி இருக்கிறார் “கோட்” ரோஜர் பெடரர்.
– நாகராஜன்







