திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதாக தலைமைப் பயிற்சியாளருக்கு எதிராக இந்திய சைக்கிள் வீராங்கனை புகார் அளித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி சைக்கிள் வீராங்கனை, தலைமைப் பயிற்சியாளர் ஆர்.கே. சர்மாவுக்கு எதிராக பாலியல் ரீதியிலான தொந்தரவு புகாரை இந்திய விளையாட்டு ஆணையத்திடம் அளித்தார். இதுதொடர்பாக விசாரிக்க இந்திய சைக்ளிங் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவை இரண்டு தனித்தனி விசாரணை குழுக்களை அமைத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வீராங்கனை அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்லோவேனியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எனது அறைக்கு வந்து என்னிடம் தவறாக நடந்துகொள்ள ஆர்.கே.சர்மா முயற்சி செய்தார். நான் ஒத்துழைக்க மறுத்தால் எனது விளையாட்டு பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தெருக்களில் காய்கறிகளை விற்பனை செய்ய வைத்து விடுவேன் என்றும் மிரட்டினார்.
இதையடுத்து, நான் பயிற்சி முகாமிலிருந்து நாடு திரும்பினேன். அதன் பிறகு அவர் எனது குடும்பத்தினரை அழைத்து தனக்கு உங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து வையுங்கள். அவருக்கு விளையாட்டில் வாழ்க்கை இல்லை என்றும் கூறினார். அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பாதுகாப்புக்காக மட்டுமல்ல; அணியில் உள்ள பிற வீராங்கனைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் அந்த வீராங்கனை குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.கே.சர்மா தற்போது ஸ்லோவேனியாவில் தான் இந்திய அணியினருடன் இருக்கிறார். இந்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிக்காக இந்திய அணி ஸ்லோவேனியாவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-மணிகண்டன்








