யாரை ஆட்சியில் அமர்த்துவது என்பதை பெரும் கலையாக கொண்டு செயல்படும் பிரசாந்த் கிஷோர் சீக்ரெட் பிளான் ஒன்றினை எடுத்து கொண்டு தமது சொந்த மாநிலமான பீகாருக்கு சென்றுள்ளார்.
பாட்னாவில் இரண்டு நாட்கள் தங்கியுள்ள பிரசாந்த் கிஷோர், தமது நெருங்கிய சகாக்களிடம் சில முக்கிய விஷயங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒன்று அவர் நேரடியாக அரசியல் களத்தில் இறங்குவதாகும். அதுகுறித்து தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், தனது அரசியல் பிரவேசத்தை பீகாரில் இருந்து தொடங்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக உள்ளதாம். இதற்கிடையே, பீகார் முதலமைச்சராக உள்ள நிதிஷ் குமாருக்கும், இவருக்கும் இருந்த மனகசப்புகள் நீங்கி இருவரும் மீண்டும் நட்புடன் பேசத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அத்தோடு இல்லாமல் நிதிஷ் குமாரை குடியரசுத் தலைவராக்க பிகே என்ற பிரசாந்த் கிஷோர் திட்டமிடுகிறாராம்.
இந்த தகவலை பாஜக தலைமைக்கும், ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் தெரியபடுத்தியுள்ளார் பிகே. இதனை கேட்ட பாஜக தலைமை , நிதிஷ் குமாருக்கு துணை குடியரசுத் தலைவர் பதவியை தர சம்மதித்துள்ளதாக பிகேவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிகேவிற்கு என்ன நிதிஷ் குமார் மீது திடீர் கரிசனம் என விசாரித்தபோது, நிதிஷ் குமார் குடியரசுத்தலைவராகிவிட்டால், அப்போது பீகாரில் ஏற்படும் வெற்றிடத்தை தம்மால் நிரப்ப முடியும் என பிகே நம்புகிறாராம்.
இதற்கிடையே, டுவிட்டரில் தமது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியவுடன் நெட்டிசன்கள் அவரை நோண்டி நொங்க எடுக்க தொடங்கிவிட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துவிட்டு, பின்னர் விலகி சென்ற நீங்கள் பீகார் மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் உங்கள் தொழிலில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தீர்கள். இப்போது என்ன எங்கள் மீது புதிய பாசம் என கேட்கத் தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸ் கட்சி உங்கள் பருப்பு வேகவில்லை என்பதால், பீகார் மீது புதிய படையெடுப்பா என்றெல்லாம் நெட்டிசன்கள் அவரை கேள்விமேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நிதிஷ் குமாருடன் முரண்பாடு ஏற்பட்டவுடனே தமது ஆதரவாளர்களை பாட்னாவிற்கு அழைத்து கூட்டம் நடத்தியவர் பிகே. அப்போது பலரும் அவரை தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினர். அதனையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்ட, பிகே காலம் கனியும்போது நல்லத் தகவலை கூறுகிறேன் என்றார். அந்த காலம் இதுதானா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.








