தமிழர்கள் அனைவரும் பச்சைத் தமிழர் என்றால் தோனி, மஞ்சள் தமிழர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டம் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு, விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று பாராட்டு விழா நடந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 7 ஆம் எண் கொண்ட சிஎஸ்கே ஜெர்சியை அவர் பரிசளித்தார்.
சென்னை அணி வென்ற ஐபிஎல் போட்டியின் கோப்பையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி தோனி வாழ்த்து பெற்றார். அப்போது, கோப்பையுடன் சிஎஸ்கே அணி நிர்வாகிகளும் முதலமைச்சருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:
முதலமைச்சராக மட்டுமல்ல, தோனியின் ரசிகராக இங்கு வந்துள்ளேன். எனது தந்தை கருணாநிதியும் தோனி ரசிகர்தான். சென்னை என்றாலே சூப்பர்தான். மீண்டும் ஒரு முறை அது நிரூபிக்கபட்டிருக்கிறது. அதற்காக இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. தோனி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை. தமிழர்கள் அனைவரும் பச்சைத் தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர். நான் மட்டும் அல்ல எனது குடும்பமே தோனியின் ரசிகர்கள்.
நெருக்கடியான சூழ்நிலையில் கருணாநிதியும், தோனியும் கூலாக இருந்து நிலைமையை கையாளக்கூடியவர்கள். தோனியின் நீண்ட தலைமுடி, அவர் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் என்று மறக்கவே முடியாது. அவரை தலைசிறந்த பினிஷர், விக்கெட் கீப்பர் என்று சொல்வதை விட, சிறந்த கேப்டன் என்று சொல்வதுதான் சரியானது.
டெண்டுல்கருக்குப் பிறகு கிரிக்கெட் என்றால் அது தோனிதான். கபில்தேவுக்குப் பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தவர் அவர். எப்போதும் இலக்குதான் முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்ச்யம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி இன்னும் பல வருடத்துக்கு வழி நடத்த வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.









