பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கிய முதலமைச்சர்!

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் ஐந்து பேருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதேபோல் கல்வித் தொலைக்காட்சியில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்களையும் முதலமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இதேபோல் சென்னை தலைமைச் செயலகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் வைஸ்யா வங்கி சார்பாக பத்து 108 ஆம்புலன்சுகள் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த ஆம்புலன்சுகளை மக்கள் சேவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே உள்ள இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடியே 42 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 13 ஆயிரத்து 553 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.