தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட தந்தை மகன் வழக்கை விரைவாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாத்தான்குளத்தில் கொரோனா முதல் அலை பரவலின் போது பொது ஊரடங்கை மீறியதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இவரும் போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜெயராஜ், பெனிக்ஸ் உயிரிழந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூரில் தந்தை , மகன் புகைப்படங்களுக்கு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“ஒரு ஆண்டுக்கு முன்பு இதே நாளில்தான் வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் இருவரும் காவலர்களால் அடித்தே கொல்லப்பட்டனர். இன்றைய தினம் அவர்களின் நினைவு நாள். இன்றைய தினத்தை லாக்கப் வன்முறை எதிர்ப்பு நாள் என உருவாக்கியுள்ளோம். இனியும் இது போன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது என்பது எங்கள் நோக்கம்.
இந்த சம்பவத்தால் காவல்துறையினரை சேர்ந்த அனைவரையும் நாங்கள் குற்றம்சாட்டவில்லை, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே குற்றம் சாட்டுகிறோம் இதுபோன்ற வன்முறைகள் இனிமேல் நடைபெறக்கூடாது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தர வேண்டும். அந்த தண்டனை இப்படி ஒரு சம்பவம் இனிமேல் நடக்காதபடி இருக்க வேண்டும்.”
இவ்வாறு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறினார்.