ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு, மூன்று கோடி ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்படும், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 6 விளையாட்டு வீரர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“விளையாட்டு வீரர்களுக்கு என்ன தேவை என்பதை, கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தால் தான் நன்கறிவேன் எனவும், விளையாட்டு துறையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். விளையாட்டு வீரர்களுக்கு தனித்திறமை இருந்தாலும், அணியாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டு வீரர்கள் தான், நாளைய தலைமுறைக்கு வலிமை எனவும் கூறினார்.
கால்பந்தில் தடுப்பாட்டம் விளையாடுவதை போன்று அரசும், கொரோனா தடுப்பு பணியில் தடுப்பாட்ட வியூகத்தை கடைபிடித்து வருவதாக தெரிவித்த அவர், ஒலிம்பிக் விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், தமிழ்நாட்டை 4 பகுதியாக பிரித்து ஒலிம்பிக் அகாடமி திறக்கப்படும் எனக் கூறினார்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு, 2 கோடி ரூபாய் ஊக்க தொகை வழங்கப்பட்டு வந்ததை 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், இதேபோன்று வெள்ளி பதக்கம் பெறுவோருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் பெறுவோருக்கு 1 கோடி ரூபாயும் ஊக்கப்பரிசு வழங்கப்படும், எனவும் அறிவித்தார்.







