பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்பதே உண்மையான பெருமை தரக்கூடியதாகும், அதற்கான உழைப்பு தொடரும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை கோபாலபுரம் இல்லம் சென்ற முதலமைச்சர், அங்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இல்லம் முன்பாக குழுமியிருந்த தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.அதன்பிறகு அண்ணா சதுக்கம் நோக்கி புறப்பட்ட முதலமைச்சர், ராதாகிருஷ்ணன் சாலையில் திடீரென காரை நிறுத்தச் சொல்லி இறங்கி பேருந்துக்காக காத்திருந்தார்.பேருந்து வந்தவுடன் அதில் ஏறி பயணிகளிடம் நலம் விசாரித்து, கருத்துகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அங்கிருந்து நேராக தலைமைச் செயலகம் சென்று ஓராண்டு சாதனை மலரை வெளியிட்ட பின் சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.