கிராம அளவில் தன்னிறைவு ஏற்பட்டால், நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடைபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கூடுதலாக 11.75 இலட்சம் ஹெக்டேர் நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், இருபோக சாகுபடி பரப்பை 20 இலட்சம் ஹெக்டராக உயர்த்துதல் ஆகியவை திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ரூ.227 கோடி திட்ட மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். அவருக்கு ஏர் கலப்பை மாதிரியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றவும், ஏற்றம் காணவும் வைத்தவர் கலைஞர் கருணாநிதி. உழவர்களின் நலனை எப்போதும் பாதுகாத்து வருகிறது அரசு. இயற்கையும் நல்ல ஒத்துழைப்பு வழங்குகிறது. கிராம அளவில் அரசின் நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும், நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடைபடும் எனவும், கிராம வளர்ச்சி பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர், “கிராமத்தில் உள்ள அனைத்து உழவர்களையும் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் பயனடைய செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.







