உக்ரைனில் ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த இடத்தைவிட்டு வெளியேறி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது. அது முதல் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் இன்னும் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது. போரின் தொடக்கத்தில், ரஷ்யாவின் கை ஓங்கினாலும், தற்போது நிலைமை அப்படி அல்ல.
உக்ரைனுக்குத் தேவையான பொருளாதார, ஆயுத, தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருவதால், வல்லரசான ரஷ்யாவால் வெற்றியுடன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த போரில், உக்ரைன் படை வீரர்களில் 11 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், 18 ஆயிரம் பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்றும் அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.
அநேரத்தில், உக்ரைன் ராணுவத்தால், ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த 21 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும், 176 போர் விமானங்களையும், 153 ஹெலிகாப்டர்களையும், 838 டேங்குகளையும், 2 ஆயிரத்து 162 ராணுவ வாகனங்களையும் அழித்தொழித்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இந்த போரில் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள், சுமார் 4 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 4 ஆயிரத்து 500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கோடியே 40 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும், இவர்களில் சுமர் 60 லட்சம் பேர், போலந்து, ரொமானியா, ரஷ்யா, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவோகியா, பெலாரஸ் ஆகிய அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐநா, சுமார் 80 லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.
உக்ரைனின் மக்கள் தொகை 4 கோடியே 32 லட்சம். இதில், ஒரு கோடியே 40 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அதாவது 4ல் ஒருவர் இடம் பெயர்ந்துள்ளனர். இது மிகப் பெரிய சோகம் என வர்ணித்துள்ள ஐநா, போர் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல், இந்த போர் எந்த தரப்புக்கும் வெற்றியை தராததாக இருக்கலாம். எனினும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போலந்து உள்ளிட்ட நேட்டோவில் உறுப்பினராக உள்ள 30 நாடுகளின் ஆதரவு இருப்பதால், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதியாக உள்ளார். இதன் காரணமாகவே, ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.











