உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் அழைத்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் அன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனம் 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதற்க்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12 இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை இன்று நேரில் அழைத்து தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வாகனங்கள் குறைத்தற்க்கு நன்றி தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அதே நேரத்தில் முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உடனடியாக நடவடிக்கை எடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரின் முயற்சி பாராட்டத்தக்கது என்றும் கூறிய நீதிபதி, அரசின் இந்த நடவடிக்கை நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பயனளிக்கும் என்றும் பாராட்டு தெரிவித்தார்.








