12 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசோதனை ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இப்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 39,53,43,767 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலை பரவக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடாத இளம் வயதினரிடையே மூன்றாவது கொரோனா அலையின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தியாவில் 12-17 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலமனுவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த பொதுநல மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.என்.பாட்டீல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 18 வயதுக்கு உட்ப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த பரிசோதனை முடிவடையும் தருவாயில் இருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து வல்லுநர்கள் அனுமதி அளித்ததும், அது குறித்த கொள்கைகள் வகுக்கப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையில் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து பரிசோதனை மேற்கொள்ளுங்கள். பரிசோதனை செய்யாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டால் அது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். பரிசோதனை முடிவடைந்தவுடன், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை எதிர்பார்த்து நாடே காத்துக்கொண்டிருக்கிறது,” என்று கூறினர். வழக்கின் விசாரணை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.




