சித்திரை திருவிழாவின்போது மதுரைக்கு வரும் அழகரை வெகு உற்சாகத்துடன் வரவேற்பார்கள் மதுரை மக்கள். அதற்கு அடுத்த ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும்தான். அண்ணன் தங்கை உறவு என்பது என்றென்றும் கொண்டாடத்துக்குரியது. ஆனால் மதுரையிலோ தங்கையின் கல்யாணத்துக்கு அண்ணன் வருவதே திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
தங்கை மீனாட்சியின் கல்யாணத்துக்கு மதுரையே விழாக்கோலத்தில் இருக்க, அதை விட படு அசத்தலாக பவனி வருகிறார் அழகர். தங்க குதிரையில் அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த நிகழ்ச்சி தான் ஒட்டுமொத்த சித்திரை திருவிழாவின் மையமாகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டும் இடமும் இது தான்.
சராசரியாக 10முதல் 15 லட்சம் பேர் அந்த ஒரு நாளில் மட்டும் மதுரையில் குவிகிறார்கள். ஆற்றில் இறங்கும் அழகரை மேலும் குளிர்விக்க தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நிகழ்வும் அரங்கேறும். மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் துலுக்க நாச்சியாருக்கு பூ வழங்குதல், எதிர்சேவை என அழகரின் பயண விவர குறிப்பே பல வரலாற்றை உள்ளடக்கியுள்ளது.
தமிழகத்தின் கலாச்சார வரலாற்றில் ஒரு திருவிழா இத்தனை நாட்கள் நடைபெறுவது சித்திரை திருவிழாவிற்கு மட்டும் தான் உண்டு. இது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் மனிதன் கொண்டாடி தீர்க்க வாய்ப்பு வழங்கும் அனைத்துமே போற்றப்பட வேண்டியவையே.







