அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்திற்கு மூடு விழா நடத்தியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நேற்று பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மகளிருக்கான இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்தால், அது மகளிருக்கு கூடுதல் சுமையாக இருக்கும், திமுக ஆட்சியில் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்த திட்டமே மகளிருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மகளிர் இரு சக்கர வாகனத் திட்டம் முடக்கப்பட்டு இருக்கிறது என்பதை நேற்று சூசகமாக அமைச்சர் பெரியகருப்பன் சட்டமன்றத்தில் அறிவித்து இருப்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப் பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என்று குறிப்பிட்ட அவர், ஒரு திட்டத்திற்கு மாற்றாக இன்னொரு திட்டத்தை கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, இலவசப் பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், நாட்கள் செல்ல செல்ல மகளிர் இலவசப் பேருந்து திட்டம் நீர்த்துப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மகளிர் இருப்பதாகவும் கூறப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தினை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையும் விடுத்துள்ளார்.








