பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் 6 மாதங்களாக பாக்கி இருந்த அரிசி மூட்டைக்கான பணத்தை கேட்க வந்த ரைஸ்மில் உரிமையாளர் மீது மளிகை கடை வியாபாரி மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குடோன் அமைத்து மளிகை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், கணபதி பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை விற்பனை செய்துள்ளார்.
6 மாதங்களாக அரிசி மூட்டைக்கான பணத்தை பெரியசாமி சீனிவாசனுக்கு கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெரியசாமியின் கடைக்கு சென்ற ரைஸ் மில் உரிமையாளர் சீனிவாசன், பணத்தை கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க முடியாது உன்னால் முடிந்ததை பார் எனக் கூறி மிளகாய் பொடியை தூவி தனது சகோதரர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து சீனிவாசனை சரமாரியாக தாக்கியுள்ளார். சீனிவாசனின் காரை சேதப்படுத்தி வீட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.
படுகாயம் அடைந்த சீனிவாசனை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
-ம. ஶ்ரீ மரகதம்







