ஆன்லைன்மயமான ஊராட்சிகள் – இன்று முதல் இணையவழியில் வரி செலுத்தும் வசதி!

கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்…

கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் இணையதளம் மூலமாக செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ஆம் ஆண்டுக்கான ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க, தொழில்நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும். கிராம ஊராட்சிகளுக்குச் செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணையவழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் அறிவித்தாா்.

டிச.15ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வரி வசூல் - ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு -

அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக https://onlineppa.tn.gov.in/ என்ற முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

அதற்காக , கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அனுமதியும் இன்று முதல் இணையதளம் மூலமாக வழங்கப்படும் என்றும், ஊரக பகுதிகளில் கட்டடங்களுக்கான அனுமதி வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட இணையதளம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது என்றும், ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.