குழந்தைகளை கண்ணாடி போல கையாள வேண்டும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவுரை

குழந்தைகளின் மனநிலை மாறி இருப்பதால், அவர்களை கண்ணாடி போல கையாள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி அரசுப் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தின விழா…

குழந்தைகளின் மனநிலை மாறி இருப்பதால், அவர்களை கண்ணாடி போல கையாள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி அரசுப் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தின விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதுச்சேரி அரசு சார்பில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

 

விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ஒவ்வொருவரின் வாழ்விலும் பள்ளி கல்வி என்பது மிக முக்கியமான விஷயம் என்றும், பிள்ளைகள் நல்ல முறையில் வளர முக்கிய காரணமாக ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவித்தார். இன்று பெற்றோர்கள் ஏழ்மையாக இருந்தாலும் தன் பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலேயே சேர்க்க விரும்புகின்றனர். ஆனால் அரசு, கல்விக்காக நிறைய செலவு செய்கிறது. தரமான அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

மேலும் வசதி இல்லை என்பதற்காக படிக்க முடியவில்லை என்ற நிலை மாற வேண்டும். காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தன்னை போன்றவர்கள் இத்தகைய மேடையில் நின்று கொண்டிருப்பதற்கு காரணம் ஆசிரியர்கள் மட்டும் தான் என்றும், தன் குடும்பத்தினர் நாட்டை பார்த்து கொண்டதால், தன்னை முழுவதுமாக பார்த்துக்கொண்டது ஆசிரியர்கள் மட்டும் தான் என தெரிவித்தார். மேலும் இன்றைய மாணவர்களை கையால்வது மிக சிறமமான காரியமாக உள்ளதாக கூறிய தமிழிசை, அதற்கு காரணம் அவர்கள் நம்மைவிட புத்திசாலியாக இருப்பதுதான் என்றார்.

 

குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் உடல் ரீதியாக, மன ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர், எனவே அவர்களை கண்ணாடியை கையாள்வதை போல் நன்கு புரிந்து கையாள வேண்டும். படிப்பு குறித்து அழுத்தம் ஏற்படுத்தாமல், போட்டி இல்லாமல் இலகுவான சூழ்நிலையை பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.