முக்கியச் செய்திகள் தமிழகம்

பாரதியார் நினைவு நூற்றாண்டு; மூத்த ஆய்வாளர்களுக்கு விருது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி மூத்த ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.

மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாரதியின் வாழ்க்கை குறித்தும், படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் பாராட்டு சான்றிதழ்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன், பேராசிரியர் முனைவர் மணிகண்டன் ஆகியோருக்கு தலா 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலை, விருது மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். இதையடுத்து திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த மாணவர்கள் 219 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கும் நிகழ்வையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கிடையே சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் 176 வகையான பறவையினங்கள், 10 வகையான பாலுட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நிலநீர் வாழ்வினங்கள் உள்ளன. 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தையினங்கள், 5 வகையான ஓட்டுமீன் இனங்கள் மற்றும் 14 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆகிய உயிரினங்களின் வாழ்விடமாக சதுப்பு நிலப் பகுதி அமைந்துள்ளது. இங்கே வனத்துறை சார்பில் சதுப்புநில சூழலியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டரை ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement:
SHARE

Related posts

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு!

Halley Karthik

படைத்த வரலாற்றை நினைவு கூறும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்!

Halley Karthik

“குறைந்த ரன்களை அடித்தாலும்…” – தோனி குறித்து சூர்யா

Halley Karthik