கணவர் உடல்நலம் பெற வேண்டுமென்று, குறி சொல்பவர் கூறியதைக் கேட்டு சொந்த பாட்டியே 6 மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நசுருதின். மீனவ தொழிலாளியான இவருக்கும் ஷாலிகா என்பவருக்கும் திருமணமாகி 1 மகன் மற்றும் 6 மாதத்தில் ஹாஜரா என்ற பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில், வீட்டின் பின்புறம் இருந்த மீன் பதப்படுத்தும் பெட்டியில், குழந்தை ஹாஜரா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் குடும்பத்தினர் கலந்துபேசி, இறந்த குழந்தையை மல்லிப்பட்டினத்தில் அடக்கம் செய்தனர். இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து, சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, குழந்தை ஹாஜராவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த தொடங்கினர். இதில், அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குழந்தை ஹாஜராவின் தந்தை நசுருதீனின் சின்னம்மா ஷர்மிளாபேகம், இவரது கணவர் அசாருதீன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியதிலிருந்து அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜி பட்டினத்தில் குறிசொல்லும் முகமது சலீம் என்பவரிடம் ஷர்மிளா பேகம் சில நாட்களுக்கு முன்பு கணவரின் உடல்நிலை குறித்துக் குறிபார்த்துள்ளார். அப்போது, உனது கணவர் உடல்நலம் குணமடைய 27 கோழிகளை பலி கொடுக்க வேண்டும் என்று முகமது சலீம் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து கோழிகளை பலி கொடுத்தும் கணவரின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படாததால், மீண்டும் குறிசொல்பவரிடம் சென்றுள்ளார் ஷர்மிளா பேகம். இந்தமுறை மனித உயிர் பலி தந்தால்தான் உன் கணவர் குணமடைவார் என்று முகமது சலீம் கூறவே, ஷர்மிளாபேகம் தமது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த தன் அக்கா மகன் நசுருதீனின் குழந்தை ஹாஜராவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். குழந்தையின் தாய் ஷாலிகாவுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, அவர் தூங்கிய பின் நள்ளிரவில் குழந்தையைத் தூக்கிச்சென்று வீட்டின் பின்புறம் கிடந்த மீன் பதப்படுத்தும் பெட்டியில் உள்ள தண்ணீரில் அமுக்கி பலி கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன் முன்னிலையில் குழந்தையின் உடல், தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாகப் பாட்டி ஷர்மிளா பேகம், அவரது கணவர் அசாருதீன் மற்றும் குறிசொல்லும் மந்திரவாதி முகம்மது சலீம் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குறி சொல்பவரின் பேச்சைக் கேட்டு, ஆறு மாத குழந்தையைத் தண்ணீரில் அமுக்கி, பாட்டியே கொலை செய்த சம்பவம் மல்லிப்பட்டினம் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.








