கட்டுரைகள்

நீட் மரணத்திற்கு எப்போது முற்றுப்புள்ளி…?


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

கட்டுரையாளர்: ஆர்.கே.மணிகண்டன்

அனிதா முதல் கனிமொழி வரை…

அனிதா – தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெயர். ஆனால், நீட் தேர்வு மரணங்கள் அத்துடன் நிற்காமல், இன்று வரை நீள்கிறது. பெரவல்லூர் பிரதிபா, பெரம்பலூர் கீர்த்தனா, நெல்லை தனலட்சுமி, விழுப்புரம் மோனிஷா என தொடர்ந்தது. கடந்தாண்டு மதுரை ஜோதி துர்கா, திருச்செங்கோடு மோதிலால் உட்பட மூவர் தங்களை உயிரை துறந்தனர்.

தற்போது, சேலம் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், நீட் தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக தற்கொலை செய்துகொண்ட நிலையில், நீட் தேர்வு எழுதிய மறுநாள், அரியலூர் சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி, தற்கொலை செய்து கொண்டிருப்பது, தமிழ்நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுவரை நீட் தேர்வு 13 மாணவர்களை பலி கொண்டுள்ளது.

 

MBBS மட்டுமே வாழ்க்கையா?

டாக்டராகும் கனவில் லட்சக்கணக்கானோர் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர், நீட் தேர்வில் பங்கேற்றுள்ளனர். எனினும், வெறும் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பு உள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் டாக்டராகும் கனவு இருந்தாலும், MBBS படிப்புக்கு இடம் கிடைக்காவிட்டாலும், தற்போதைய காலத்தில் வேலைவாய்ப்பு தரும் ஏராளமான படிப்புகள் இருப்பதை, அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனஉறுதி அவசியம்

டாக்டராக பணியாற்ற மனஉறுதி அவசியம் என்றும், MBBS கனவில் உள்ள மாணவர்கள், முதலில் இந்த தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றும் உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தோல்விக்கு தற்கொலை தான் தீர்வு என்றால், உலகில் கோடிக்கணக்கானோர் உயிர் வாழ இயலாது, என்பதை மாணவச் செல்வங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

MBBS படிப்பு தான் வாழ்க்கை, என குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து, பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது என்றும், அவர்களின் விருப்பம் மற்றும் திறமையின் அடிப்படையில், விரும்பும் துறையில் முன்னேறிச் செல்ல, முதலில் பெற்றோர் தான் அடித்தளம் அமைக்க வேண்டும். அதற்கு நிகரான கடமை ஆசிரியர்களுக்கும் உண்டு.

உயிரை துறப்பது மாபெரும் மடமை

நீட் பயிற்சி மையங்கள் பெருகிவிட்டதும், ஊடகங்களில் அவர்கள் தரும் விளம்பரங்களும், மாணவர்களிடையே ஒரு மாய சூழலை உருவாக்குகிறது. அந்தவகையில், ஆரம்பப் பள்ளி அளவிலேயே புறச்சூழல் “டாக்டர்… டாக்டர்…” என பிஞ்சு மனதில் ஆசையை உருவாக்குகிறது. லட்சியம் என்பது அனைவருக்கும் அவசியம் என்றாலும், அது எட்டாத சூழலில் உயிரை துறப்பது மாபெரும் மடமை என்பதும், குழந்தைப் பருவத்திலேயே அழுத்தமாக கற்றுத்தரப்பட வேண்டும். அவர்கள் மனஉறுதி படைத்தவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என உளவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

அரசியல் வேண்டாம்

நீட் மற்றும் மாணவர்களின் மரணத்தில், கட்சிகள் அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2016-ல் நீட் தேர்வை கொண்டு வர, இந்திய மருத்துவக் கவுன்சில் பணிகளை தொடங்கியபோது, அந்த முயற்சியை ஆரம்பத்திலேயே அரசியல் கட்சிகள் எதிர்க்காதது ஏன்?, என்று கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன். கடந்த அதிமுக ஆட்சியில், நீட் மரணங்கள் நிகழ்ந்தபோது அதுகுறித்து முதலில் திமுக பிரச்னை எழுப்ப, உடனடியாக ஆளுங்கட்சியும் அரசும் நிவாரண உதவிகளை வழங்கியது. தற்போது, அதே பாணியில் நீட் மரண விவகாரத்தை அதிமுக கையிலெடுக்க, திமுக அரசு நிவாரண உதவிகளை வழங்குவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்துக் கணிப்பு விவரம்

அதே நேரத்தில், இவ்வாறு நிவாரண உதவி வழங்குவதே ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதை உறுதிபடுத்துகிறது ஆன்லைன் கருத்துக் கணிப்பு. நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?, என நியூஸ் 7 தமிழ் பிரைம் யூடியூப் சேனலில் கேட்கப்பட்ட கேள்விக்கு, டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என 48 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர். மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என 26 சதவீதம் பேரும், மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என 13 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். நீட் தற்கொலையில் அரசியல் கூடாது என 9 சதவீதம் பேரும், இத்தகைய தற்கொலைக்கு நிவாரண உதவி அளிக்கக் கூடாது என 5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், கட்சிகள் நீட் விவகாரத்தில் அரசியலை புகுத்தாமல் விலகி நிற்பதுடன், இந்த பிரச்னையை உணர்வுப்பூர்வமாக மட்டும் அணுக வேண்டும், என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

கோடிகளை குவிக்கும் மருத்துவக் கல்வி

பாடத்திட்டம், பள்ளியில் கிடைத்த வசதி, சமூக, பொருளாதார சூழல் போன்ற பல்வேறு மாறுபாடுகள் உள்ள நிலையில், ஒரே தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும், சமமாக நுழைவுத் தேர்வை நடத்துவது சரியா? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. மருத்துவக் கல்வி கோடிகளை குவிக்கும் தொழிலாகவும், நீட் பயிற்சி மையங்கள் லட்சங்களில் புரளும் தொழிலாகவும் மாறிவிட்டது. இத்தகைய சூழலில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது கிராமப்புற பகுதி மாணவர்களுக்கு தனியே நீட் தேர்வு நடத்த வேண்டும், என்ற கோரிக்கையையும் பல்வேறு தரப்பினர் எழுப்புகின்றனர்.

நீட் மரணங்கள் முடிவுக்கு வரட்டும்…!

இச்சூழலில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட்டுக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, மாணவர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இனியேனும், நீட் மரணங்கள் முடிவுக்கு வரட்டும்…! அரியலூர் அனிதாவில் தொடங்கிய அந்த துயரம், அதே அரியலூரை சேர்ந்த கனிமொழியுடன் முற்றுப் பெறட்டும்.

Advertisement:
SHARE

Related posts

அகத்தியனின் “காதல் கோட்டை”க்கு வயது 25

Gayathri Venkatesan

‘லாபம்’ மக்களுக்கானதா?

Halley karthi

வங்கத்தின் சிங்கப் பெண் மமதா பானர்ஜி!