இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 468 ரன்களை ஆஸ்திரேலியா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்து வருகிறது.
ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், நாதன் லியான் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
இங்கிலாந்துக்கு பாலோ-ஆன் கொடுக்காத ஆஸ்திரேலிய அணி 237 ரன்கள் முன்னிலை யுடன் 2-வது இன்னிங்சை, தொடர்ந்தது. நான்காவது நாளான இன்று, 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக, 468 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலேயே ஹசீப் ஹமீது விக்கெட்டை இழந்தது. இதையடுத்து ரோரி பர்ன்ஸும் டேவிட் மலானும் ஆடி வருகின்றனர். இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.








