சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கையை அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர், அவரது ஒன்றரை வயது குழந்தையை தலையில் நீர் வந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. இது குறித்து செவிலியர்களிடம் தெரிவித்த போது, எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.
தொடர்ந்து கை மேலும் அழுகிய நிலையில், மருத்துவர்கள் குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை தற்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவர்கள் இல்லாததாலும், அலட்சியத்தாலும் தான் தனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்திருப்பதாகவும், தவறு ஏற்பட்டு இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தையின் கை முழுதும் பாதிப்படையாமல் இருக்க,அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. வளர்ச்சி குறைவான குழந்தை என்பதாலும், குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாலும் அதற்கான சிகிச்சைகளும் எடுக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குழந்தை சம்பந்தமான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் நானும் தகவலை கேள்விப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரித்தேன். குழந்தை 32 வாரத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை. சிகிச்சை அளித்திருக்கிறார்கள். மூன்று அலுவலர்களை விசாரித்தேன். கையில் ஊசி போட்டது பற்றி இன்று விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். மருத்துவர்களாக இருக்கட்டும் அல்லது செவிலியர்களாக இருக்கட்டும். அவர்கள் யாரும் பாதிப்பு ஏற்படுத்த மருத்துவமனைக்கு வருவதில்லை. பாதுகாக்கத்தான் வருகிறார்கள். நிச்சயம் உண்மைத்தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








