பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து ரூ.1.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் கார்ப்ரேட் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
2014-ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் 36,270 கோடி ரூபாயில் இருந்தது. பிரதமர் மோடி அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த ஆட்சியின் காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த நிதியாண்டில் நிகர லாபம் 1.04 லட்சம் கோடியாக அதிகரித்தது. இந்த வெற்றியில் மகிழ்ச்சி அடைந்து வங்கிகள் தேங்கிவிடக்கூடாது. சிறந்த நிர்வாக முறைகளை பின்பற்றி, ஒழுங்குமுறை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
விவேகமான பணப்புழக்கத்தை உறுதிப்படுத்துவதுடன், வலுவான சொத்து, பொறுப்பு மற்றும் இடர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். முன்பு இந்திய பொருளாதாரம் இரட்டை இருப்பு நிலை பிரச்னையில் இருந்தது, அந்த நிலை தற்போது இரட்டை இருப்பு நிலை நன்மையாக மாறியுள்ளது.
2014 ஆண்டுக்கு பிறகு மத்திய அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் பொதுத்துறை வங்கிகளின் நிலை மேம்பட்டுள்ளது. நாம் அடைந்த இந்த வேகத்தை இழக்கக்கூடாது. இந்த கட்டத்தில் வங்கிகளின் பலத்தை உறுதிப்படுத்துவது நமது கடமையாகும். இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.







