மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரியை கடக்க வாய்ப்புள்ளது என்றும், அதிகபட்சமாக புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டி கடக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக, நாளை நள்ளிரவில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ் கே பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குனர், தீயணைப்பு & மீட்பு பணிகள், கடலோர பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாண்டஸ் புயலின் நகர்வுகள், ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார் பாலச்சந்திரன். முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கினார் தலைமைச்செயலாளர் இறையன்பு. புயல் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் நாளை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
நெடுஞ்சாலை, நீர்வள ஆதாரத்துறை, மின்வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.