திருவள்ளூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் குளத்தில் இன்று (ஜூலை14) காலை அப்பகுதியைச் சேர்ந்த 5 நபர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, நர்மதா (11) என்ற சிறுமி திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றதால், அச்சிறுமியைக் காப்பாற்றுவதற்காக சுமதி (35), ஜோதி (35), அஸ்விதா (14), ஜீவிதா (14) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். இதில் 5 நபர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.”
“இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.” என்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








