முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு ஒரு லிட்டர் பால் பாக்கெட்டை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பரிசாக வழங்கினார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பத்தாவது மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு லிட்டர் பால் பாக்கெட்டை பரிசாக வழங்கினர்.
இந்நிகழ்வில் திமுக பகுதி கழக செயலாளர் பொறுப்பாளர் மற்றும் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் என 5000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வரிசையில் நின்று பால் பாக்கெட்டுகளை வாங்கி சென்றனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா









