டெல்லி துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர் சத்யேந்தர் ராஜினாமா செய்ததை, ஆளுநர், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபானக் கொள்கையை அங்கு அறிமுகப்படுத்தினர். 749 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மதுக்கடை உரிமையாளர்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம், அதிகாலை 3 மணிவரை மதுக்கடைகளை திறந்து வைத்துக் கொள்ளலாம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக, தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், துணைநிலை ஆளுநருக்கு அறிக்கையாக சமர்ப்பித்தார். அதனடிப்படையில் ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிக்க: கிரீஸில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து – 32 பேர் பலி!
இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிசோடியா மற்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெய்ன் தங்கள் பதவிகளை செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வினய்குமார் சக்சேனா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார். சிசோடியா வசம் இருந்த முக்கிய துறைகள் கைலாஷ் கலோட் மற்றும் ராஜ்குமார் ஆனந்த ஆகிய அமைச்சர்களுக்கு தற்காலிகமாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக அமைச்சரவை மாற்றம் அறிவித்து இலாக்கக்கள் பிரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-ம.பவித்ரா









