“மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்தினார்” – எ.வ.வேலு

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டானின் தியாகத்தை முதலமைச்சர் விஜய் கொச்சைப்படுத்தினார் என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். இந்தப் பதிலுரையில் சர்க்காரியா கமிஷன், பார்டி ஃபண்ட் குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கை உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி திமுக மீது ஆவேசமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இறுதி நாளான இன்று சட்டப்பேரவை கூடியதும், முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகரின் உத்தரவுப்படி திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.என்.நேரு, “முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல், வேண்டுமென்றே திமுகவை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடு, நேற்று பொய்யான செய்திகளை ஒரு மணி நேரம் சினிமா பாணியில் சொல்லி முடித்தார். பழைய வழக்குகளை எல்லாம் சொன்னார்; அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டோம். சபாநாயகர் அதை மறுத்துவிட்டார். மிசா என்பது எவ்வளவு கொடுமையானது என்று அனைவருக்கும் தெரியும். ஒரு காலத்தில் யாரும் பேசக்கூடாது, எழுதக்கூடாது என்று ஜனநாயக கொடுமை அரங்கேறியது. அப்போது எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதை எதிர்த்ததால் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய மாபெரும் தியாகத்தை, முதலமைச்சர் விஜய் பேரவையில் செய்கை எல்லாம் காட்டி கொச்சைப்படுத்தினார்” என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, “கடந்த 116 நாட்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் பற்றியும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியிருந்தார்; அதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்வார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்

நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க கூடாது என்று பேரவைத் தலைவர் கொடுத்த சட்டமன்ற விதி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, விதி 92-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்ற விதியை மீறி முதலமைச்சர் விஜய், அமலாக்கத்துறை வழக்கை பற்றி நேற்று பேரவையில் பேசினார். மிசா குறித்து முதலமைச்சர் பேசினார். அவர் சிறந்த நடிகர் என்பதால், அவருக்கே உரிய Body Language செய்தார். மிசா கொடுமையை எங்கள் தலைவர் ஸ்டாலின் அனுபவித்தார்; அவரது தியாகத்தை கொச்சைப்படுத்தி Body Language செய்து காட்டினார்.

இதனால் முதலமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென சபாநாயகரிடம் கோரினோம். ஆனால் அதனை சபாநாயகர் மறுத்துவிட்டார். மேலும் அவைக் காவ்லர்களை வைத்து பலவந்தமாக எங்களை வெளியேற்றினார். இதுவரை நடுநிலையோடு இருந்த சபாநாயகர் இன்று ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார். சட்டசபையில் ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளது. திமுக நடத்தியது ரியல் ஆட்சி. இப்போது நடப்பது ரீல்ஸ் ஆட்சி.” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.