கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத் திருவிழா!
பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில், உண்ணாமுலை அம்மன் உடனுறை அருணாசலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் ஆகியோர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளியும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தும் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
திருவிழாவின் ஏழாம் நாளான நவம்பர் 21-ம் தேதி விநாயகர் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து, விநாயகர், சந்திரசேகர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்ட பரணி தீபம்!
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தை ஏற்றுவதற்கான கொப்பரை, 2,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மலை உச்சிக்குத் திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டது. திருவிழாவின் 10-ம் நாளான இன்று (நவ. 24) அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன.
இதையடுத்து, அதிகாலை 4 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோயில் சுவாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன், அநேகன் தத்துவத்தையும், பஞ்சபூதங்களும் இறைவனே என்பதையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.

அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவக் காட்சி!
மாலையில் தங்கக் கொடிமரம் முன்புள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து, ஆணும் பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், உமையவளுக்குத் தனது இடபாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக அருணாசலேஸ்வரர் எழுந்தருளினார். ஆண்டுக்கு ஒருமுறை சில நிமிடங்கள் மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவமாடி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது மகா தீபம்!
அர்த்தநாரீஸ்வரர் காட்சியளித்ததைத் தொடர்ந்து, மாலை சரியாக 6 மணிக்கு சுவாமி சன்னதி முன்புள்ள அகண்டத்தில் தீபச்சுடர் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், மலையே மகேசன் எனப் போற்றப்படும் 2,668 அடி உயர திருவண்ணாமலை மலை உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலப் பாதையில் இருந்த பக்தர்களும் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை நோக்கி வணங்கி வழிபட்டனர்.

4,500 கிலோ நெய்; 1,000 மீட்டர் காடா துணி!
மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள தீபக் கொப்பரையில் சுமார் 4,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காகப் பருவத ராஜகுல மக்கள் 48 நாள்கள் விரதம் இருந்து மலை உச்சிக்குச் சென்று மகா தீபத்தை ஏற்றினர். மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களும் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மக்கள் தரிசனம் செய்வதற்காகத் தொடர்ந்து 11 நாள்களுக்கு மலை உச்சியில் மகா தீபம் எரியும். சிவபெருமான் அக்னிப் பிழம்பாகக் காட்சியளித்ததை நினைவுகூரும் வகையில் இந்த மகா தீபம் ஏற்றப்படுகிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!
கார்த்திகை மகா தீபத் திருவிழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இதனால் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மகா தீபம் மற்றும் இதர நாட்களில் பக்தர்கள் மலை ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.





