ஜப்பானின் ஆய்ச்சி – நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல பிரிவுகளில் பதக்கங்களை குவித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மனிஷா ராமதாஸ் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
அவர் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகள்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.




