2030-க்குள் இந்தியா – போலந்து வர்த்தகம் இரட்டிப்பாக்க இலக்கு!

இந்தியா – போலந்து இடையிலான வர்த்தகத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்க பிரதமர் மோடி, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

போலந்து குடியரசின் பிரதமர் டொனால்ட் டஸ்க் அக்டோபர் 21 முதல் 23-ம் தேதி வரை இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். அவருடன் சுமார் 100 முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இந்தியா வந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி போலந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு உத்திசார் கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டது. மேலும், 2024-2028 காலகட்டத்துக்கான இந்தியா – போலந்து செயல் திட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தின் இடைக்கால மதிப்பாய்வுக்கு இரு தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்தனர்.

தற்போதைய பயணம், இரு நாடுகளின் உத்திசார் கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக தலைவர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டாண்மையை உறுதியான, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட மற்றும் இரு தரப்புக்கும் பயனளிக்கும் முடிவுகளாக மாற்றுவதற்கான உறுதியையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

வர்த்தகம் மற்றும் முதலீடு

இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க இரு தலைவர்களும் இலக்கு நிர்ணயித்தனர். ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டிய போலந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதையும், வரும் ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்கும் அதன் வளர்ச்சிப் பாதையையும் போலந்து பாராட்டியது. இந்தியாவில் முதலீடுகளை விரிவுபடுத்துமாறு போலந்து நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் மிகப்பெரிய சந்தை, திறமையான பணியாளர்கள், வளர்ந்து வரும் உற்பத்தி மற்றும் புத்தாக்கச் சூழல் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு

இந்தியா – போலந்து பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியளித்தனர். 2026 செப்டம்பரில் வார்சாவில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டு பணிக்குழுவின் 8-வது கூட்டத்தின் முடிவுகளை அவர்கள் வரவேற்றனர். இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே வழக்கமான கலந்துரையாடல்களைத் தொடரவும், ராணுவத் தொழில்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாதுகாப்புத் தொழில்துறை பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் முன்மொழியப்பட்டது.

விண்வெளி, புதிய தொழில்நுட்பங்கள்

விண்வெளித் துறையில் ஒத்துழைப்பை உத்திசார் கூட்டாண்மையின் முக்கிய அம்சமாக இரு நாடுகளும் அங்கீகரித்தன. இத்துறையில் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டன. செமிகண்டக்டர்கள் துறையில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். பேட்டரிகளை மறுசுழற்சி செய்தல், அரிய மண் கனிமங்களைச் சுத்திகரித்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த தொழில்துறைகளிலும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு

இந்தியா – போலந்து இடையே நேரடி விமானச் சேவைகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இதற்காக இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் ஊக்குவிக்கப்பட்டனர். கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் கடல்சார் பாதுகாப்பிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்தன. துறைமுகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், போக்குவரத்து நேரத்தைக் குறைக்கவும், முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும் முடியும் எனத் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஐ.நா. சீர்திருத்தம் மற்றும் சர்வதேச விவகாரங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் பிரிவுகளை விரிவுபடுத்துவது உள்ளிட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என ஒப்புக்கொண்டனர். சீர்திருத்தம் செய்யப்பட்ட விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக இடம்பெறுவதற்கு போலந்து ஆதரவு தெரிவித்தது. மேலும், 2028-2029 காலகட்டத்துக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர பதவிக்கு இந்தியா போட்டியிடுவதற்கும் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது.

உக்ரைனில் நீடிக்கும் போர் மற்றும் அதனால் ஏற்படும் மனிதாபிமான பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளுக்கு இணங்க, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும் வகையில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதி ஏற்பட வேண்டும் என வலியுறுத்தினர். இந்தப் போர் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில், குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளையும் சுட்டிக்காட்டினர்.

இறுதியாக, தமக்கும் தமது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு பிரதமர் டொனால்ட் டஸ்க், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். 2024-2028 செயல் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியா – போலந்து உத்திசார் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும், பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தவும் இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.