பதக்கம் வென்ற பாரா ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து – ஊக்கத்தொகையும் அறிவித்தார்!

ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானின் ஆய்ச்சி – நகோயா நகரில் 2026-ம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்றனர். குறிப்பாக, பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், அவர்களுக்கு ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் ஒற்றையர் SL4 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கும், பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்களுக்கும், பெண்கள் ஒற்றையர் SH6 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ அவர்களுக்கும், டேபிள் டென்னிஸ் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் MD4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மகத்தான சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கு ரூ.75 இலட்சமும், வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் நித்ய ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.50 இலட்சமும், வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு ரூ.30 இலட்சமும் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனைகளைப் படைத்துள்ளதோடு, தமிழ்நாட்டின் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளனர். இவ்வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து உயர்ந்த இலக்குகளை நோக்கிப் பயணித்து, சர்வதேச அரங்கில் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!” என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.