தென்காசியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிலையில் அங்குள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக நாளை தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள சூழலில், விழாவிற்கான முன்னேற்பாடுகளை தென்காசி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், விழா நடைபெறும் கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள அரங்கத்திற்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வருகை தந்தார்.
அப்போது, விழா மேடையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, முதல்வர் வந்திரங்க உள்ள தென்காசி ரயில் நிலையம் மற்றும் குற்றாலம் அரசினர் விருந்தினர் மாளிகை, முதல்வர் செல்லக்கூடிய வழித்தடங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மணிமுத்தாறு ஆயுதப்படை காவலரிடம் சுமார் 7 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த நைஜீரியா நாட்டவரை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்த, நெல்லை சைபர் கிரைம் காவலர்களை அழைத்து அவர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை அழைத்து பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வரும் சூழலில், இணையதளத்தின் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து தமிழக காவல்துறை நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
முக்கியமாக ‘பாஸ்’ மோசடி என்கின்ற பெயரில் தற்போது சைபர் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறுகிறது. குறிப்பாக, ஒரு துறையில் வேலை பார்த்து வருபவர்களை டார்கெட் செய்து அவரது உயர் அதிகாரிகள் போல் பேசி அவர்களிடம் பணம் பறிப்பது என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அதனை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறது.
அப்படி பாஸ் மோசடி என்ற பெயரில் ஆயுதப்படை காவலரை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நைஜீரியாவை சேர்ந்த ஸ்டான்லி என்ற நபரையும், நாகலாந்தை சேர்ந்த ராம்சந்தர்ஷா என்ற நபரையும் தமிழக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பல மாநில போலீசார் தேடி வரும் இந்த குற்றவாளிகளை தமிழக போலீசார் துப்புத் துலக்கி கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது. அவர்களது பணியை சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.