ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.nic.inல் கடந்த அக்டோபர் 28ம் தேதி வெளியிடப்பட்டது.
தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.10.2022 முதல் 31.10.2022 வரை பிற்பகல் 5.30 மணி வரை தேர்வர்கள் இணைய வழியில் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
இந்நிலையில் இன்று ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்களை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.







