சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்வு செய்யப்படாமல் இருக்கும் 10 முக்கிய கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, கடந்த மே 7-ம் தேதி அன்று, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்காக இந்த ஆண்டே ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி, மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள பத்து முக்கிய கோரிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒப்படைக்கப்பட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றும் பணிகளுக்கான மதிப்பீடுகள் தயார் செய்ய, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள பணிகளுக்கு, தயார் செய்யப்பட்ட மதிப்பீடுகளை அரசுக்கு பரிந்துரை செய்திடும் வகையில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினர்கள், வருவாய், காவல், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநில அளவில் தலைமைச் செயலாளரை தலைவராகக் கொண்டு பணிகளை தேர்வு செய்திடும் குழுவும், முதலமைச்சர் தலைமையில் உயர்நிலைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.







