கல்லூரி மாணவியை திருமணம் செய்த 17 வயது சிறுவன்

7 மாதத்துக்கு முன்பு மாயமான 17 வயசு சிறுவன் கல்லூரி மாணவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்திருக்கிறது. சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து…

7 மாதத்துக்கு முன்பு மாயமான 17 வயசு சிறுவன் கல்லூரி மாணவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்திருக்கிறது.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் ஏப்ரல் 6ம் தேதி இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரிக்கு சென்ற மாணவன் மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடினர்.

மாணவன் கிடைக்காத நிலையில் இதுகுறித்து அவரது பெற்றோர் கருப்பூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவனை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதற்கிடையில் மாணவனின் பெற்றோர் ஆட்கொணர்வு மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் மாணவனின் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் தீவிர விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் மாணவன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவன் மற்றும் அவருடன் இருந்த இளம்பெண்ணையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளம்பெண் மாணவனை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது இருவரும் கல்லூரியில் படித்து வந்த காலத்தில் காதலித்து வந்தது தெரியவந்தது. பின்னர் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என மாணவனிடம் அந்த இளம்பெண் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி மாணவன், கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, இளம்பெண்ணுடன் சென்றுள்ளார்.பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு பேரிகையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது விசரானையில் அம்பலமானது.

வீட்டிலிருந்து மாயமான நேரத்தில் மாணவனுக்கு 18 வயது முடிய 3 மாதம் இருந்தது. இதனால் இளம்பெண் மீது போலீசார், குழந்தை திருமணம், சிறுவனை கடத்திச் சென்று தனிமையில் இருந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். தற்போது இளம்பெண் 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்ததையடுத்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

7 மாதத்திற்கு முன்பு மாயமான மாணவன் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.