பாகிஸ்தானில் 2 வாரத்தில் இந்து சிறுமிகள் 4 பேர் கடத்தல்

பாகிஸ்தானில் கடந்த 15 நாட்களில் 4 இந்து சிறுமிகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் இந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின்…

பாகிஸ்தானில் கடந்த 15 நாட்களில் 4 இந்து சிறுமிகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் இந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ஹைதராபாத்தில் உள்ள ஃபதே சவுக் பகுதியில் இருந்து வீடு திரும்பிய சந்திரா மெஹ்ராஜ் கடத்தப்பட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறிய தகவல்களின்படி, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இன்னும் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை என கூறினர்.

சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

செப்டம்பர் 24ம் தேதியன்று, மீனா மேக்வார் என்ற 14 வயது சிறுமி நசர்பூர் பகுதியில் இருந்து கடத்தப்பட்டார். மற்றொரு பெண் மிர்புர்காஸ் நகரில் வீடு திரும்பியபோது கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே ஊரில், கடந்த சில நாட்களுக்கு முன் ரவி குர்மி என்ற இந்து நபர், தனது மனைவி ராக்கி கடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். பின்னர் அவர் இஸ்லாமுக்கு மாறி, ஒரு முஸ்லீம் நபரை மணந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ராக்கி இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் அகமது சாண்டியோவை திருமணம் செய்து கொண்டதாகவும் உள்ளூர் போலீசார் கூறினர்.

சமீப காலமாக பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம், கரீனா குமாரி என்ற டீனேஜ் இந்து பெண், தான் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு ஒரு முஸ்லீம் ஆணுடன் திருமணம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

சத்ரன் ஓட், கவீதா பீல் மற்றும் அனிதா பீல் ஆகிய மூன்று இந்து சிறுமிகளும் அதே விதியை சந்தித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது. மார்ச் 21 அன்று, பூஜா குமாரி என்ற இந்துப் பெண், பாகிஸ்தானிய ஆணின் திருமணத்தை மறுத்ததால் சுக்கூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், பாகிஸ்தானில் உள்ள நாடாளுமன்றக் குழு, கட்டாய மத மாற்றங்களுக்கு எதிரான மசோதாவை நிராகரித்தது, அப்போதைய மத விவகார அமைச்சர் நூருல் ஹக் காத்ரி, வலுக்கட்டாய மத மாற்றங்களுக்கு எதிரான சட்டத்தை இயற்றுவதற்குச் சூழல் சாதகமாக இல்லை என்று கூறியிருந்தார். வலுக்கட்டாயமாக மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் நாட்டில் அமைதியைக் குலைத்து சிறுபான்மையினரை மேலும் பாதிப்படையச் செய்யும் என்று அமைச்சர் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

மத்திய புலனாய்வு அமைப்பின் 2020 தரவுகளின்படி பாகிஸ்தானின் மக்கள் தொகையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் வெறும் 3.5 சதவீதம் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.