ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தில் நடித்த யானை வளர்ப்போர்களான பொம்மன், பெள்ளி தம்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. வண்ணமயமான அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு, அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கர் விருதினை பெற்றனர். ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றதை இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீலகிரி மாவட்டம் முதுமலையில், தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் .
இந்த நிலையில், அப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை சென்னை, தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுப் பத்திரமும், பொன்னாடையும் அணிவித்து இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இதனையடுத்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பொம்மன், பெள்ளி தம்பதி, குழந்தை மாதிரி தான் யானை குட்டிகளை வளர்க்கின்றோம். குழந்தை மாதிரி பார்த்து குளிப்பாட்டி பெரிது பண்ணி அனுப்புகிறோம். எங்கள் குழந்தைகளை வளர்ப்பது மாதிரி தாய் பாசத்துடன் வளர்த்திருக்கிறோம். யானையிடம் பாசமளித்தால் நம்மிடம் நன்றாக பாசம் வைத்திருக்கும். இப்போது எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பாராட்டு மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா