புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.   தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி…

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வழங்கினார்.

 

பின்னர் நெடுஞ்சாலைத் துறை சார்பில் தருமபுரி, சேலம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 58 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் ஒரு ஆற்றுப்பாலம் ஆகிய மூன்று பாலங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

சமூகப் பாதுகாப்புத்துறை சார்பில், இராமநாதபுரம், அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு 4 கோடியே 79 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் கடலூர், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல் தளம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி வசதியற்ற 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக, போக்குவரத்துத்துறை செயலாளர் கோபாலிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.