முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் ரூ.12 கோடியில் ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆழித்தேர் வடிவில் 7,000 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம். இதில் கருணாநிதியின் உருவச்சிலை, அவரது தந்தை முத்துவேலர் நினைவு நூலகம், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம், கூட்ட அரங்கு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்த அவர், இன்று காலையிலும் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் ஆகிய கலை நிகழ்ச்சிகளிலும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமின்றி நிகழ்ச்சிகளையும் முழுமையாக இருந்து கண்டு மகிழ்ந்தார்.
காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. கலைஞர் கோட்டத்தினையும், கருணாநிதி உருவச்சிலையையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பீகார் துணை முதலவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று முத்துவேலர் நினைவு நூலகத்தை திறந்து வைத்தார். உடல்நலக்குறைவு காரணமாக இந்த நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. கலைஞர் கோட்டத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு திருமண மண்டபங்கள் திறக்கப்பட்டு 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த கலைஞர் கோட்ட அருங்காட்சியகத்தில், கருணாநிதியின் உருவச்சிலை, அவரது தந்தை முத்துவேலர் நினைவு நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம், கூட்ட அரங்கு, கருணாநிதியின் அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் கருணாநிதி பயன்படுத்திய பொருட்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலும் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திமுக-வின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திருவாரூர் வந்துள்ளனர். விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் அதிக அளவில் போடப்பட்டு உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா






