இயக்குநர் கரண் ஜோஹர் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு வாழ்த்திய ஷாருக்கான்!

பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கரண் ஜோஹர் பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர்களில்…

பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கரண் ஜோஹர் பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர்களில் முக்கியமானவர். இவர் 1998-ம் ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியான ‘குச் குச் ஹோத்தா ஹை’ படத்தின் மூலம் இயக்குநராக இந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர். பின்னர் ‘கபி குஷி கபி கம்’, ‘கபி அல்விதா நா கெஹ்னா’, ‘மை நேம் இஸ் கான்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை இயக்கி வெற்றி கண்டார். இவர் 2016ம் ஆண்டு கடைசியாக ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தை இயக்கினார். அதன்பிறகு இவரது இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை, மாறாக தயாரிப்பு பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ என்ற படத்தை கரண் ஜோஹர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை வியாகோம் 18 மற்றும் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டீசரை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கரண் ஜோஹருக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ஷாருக் கான் கூறியதாவது, ”கரண் 25 வருடமாக சினிமா இயக்குநராக பயணித்துவிட்டாய். உனது அப்பாவும் எனது நண்பருமான டாம், இதை சொர்கத்தில் இருந்து பார்த்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைவார். நான் எப்போதும் சொல்வது அதிகமான படங்களை எடுங்கள் என்பதுதான். ஏனெனில் அது நாம் வாழ்க்கைக்கு அளவற்ற அன்பினை கொண்டு வருகிறோம். டீசர் அருமையாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.” இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.