உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு, தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிப்புரிந்துவந்த சங்கர் குமார் (வயது 31) என்பவர் நேற்று (18.06.2025) இரவு சுமார் 8.30 மணியளவில் முறப்பநாடு அருகில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்புச் சுவரில் கை வைத்தபோது நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

காவலர் சங்கர் குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சங்கர் குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.