தமிழ்நாட்டில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக கடந்த 9ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து பிற அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக்கொண்டனர். அதன் பின்னர் இலாகாக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, புதிதாக 23 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், அரசுமுறை பயணமாக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடியை விஜய் சந்திக்க உள்ள நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் விஜய் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு முதல்வர் விஜய் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.







