தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும். உள்ளூர் பண்டிகை நாட்கள். பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதி அளித்து முதலமைச்சர் விஜய் நேற்று அரசாணை வெளியிட்டார். இதற்கு திரைதுறையை சேர்ந்த பலரும் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அன்பிற்குரிய முதலமைச்சர் விஜய், அவர்களே, மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவரும், மிகச் சிறந்த நடிகராகத் திகழ்ந்து அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளவருமான விஜய் அவர்களே, திரையுலகின் தற்போதைய சூழலை ஆழமாகப் புரிந்துகொண்டு, திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் 7 நாட்களுக்கு அனைத்துப் படங்களுக்கும் தினமும் 5 காட்சிகள் திரையிடலாம் என்ற நடைமுறையைச் செயல்படுத்தியமைக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
அனைத்துத் துறைகளிலும் உள்ள பொதுமக்களுக்குப் பேருதவியும், முற்போக்கான வளர்ச்சியும் அளிக்கும் வகையிலான மேலும் பல அரசாணைகள் (GOs) எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எங்கள் அனைவரின் சார்பாகவும் ஒரு பெரிய ‘விசில்’ (ஆரவாரம்)” என்று கூறியுள்ளார்.







