“தலைமை தேர்தல் ஆணைர் ஞானேஷ் குமார் அல்ல வேனிஷ் குமார்!” – மம்தா பானர்ஜி சாடல்

வாக்காளர்களின் உரிமைகளையும் எதிர்க்கட்சிகளையும் காணாமல் போகச் செய்வதே தலைமை தேதல் ஆணையரின் வேலை என மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி , ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், சி.பி.எம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, ஜான் பிரிட்டாஸ் எம்.பி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சுப்ரியா சூலே எம்.பி, பி.டி.பி கட்சி தலைவர் மெகபுபா முஃப்தி, திருமாவளவன் வி.சி.க, வைகோ மதிமுக உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்

இக்கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையாகத் சாடியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் நடைமுறை முற்றிலும் தோல்வியடைந்த, தன்னிச்சையான நடவடிக்கை எனக் குறிப்பிட்ட அவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணிக் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, நாட்டின் தேர்தல் ஆணையம் மற்றும் அதன் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை முற்றிலும் முறைகேடானது எனக் குற்றம்சாட்டினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சாடிய அவர், “நாங்கள் அவரை ஆரம்பத்திலிருந்தே ‘வேனிஷ் குமார்’ என்றுதான் அழைத்து வருகிறோம்; வாக்காளர்களின் உரிமைகளையும் எதிர்க்கட்சிகளையும் காணாமல் போகச் செய்வதே இவரது வேலையாக உள்ளது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR என்ற வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை முற்றிலும் குழப்பமானதாகவும், லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கும் நோக்கம் கொண்டதாகவும் உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் அவருடைய மென்பொருள் குழுவும் ஜனநாயகத்தையும் வாக்காளர் உரிமைகளையும் ஏமாற்றி ஒழித்துக்கட்டி வருகின்றனர்.மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியின் கீழ், தேர்தல் பிந்தைய சூழலால் கொல்கத்தாவில் உள்ள தனது சொந்த வீட்டிலிருந்துகூட வெளியே வர முடியாத அளவிற்குப் பாதுகாப்பு மற்றும் அரசியல் அச்சுறுத்தல்கள் நிலவுவதாக மம்தா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மற்றும் அதன் தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்த வேண்டியதன் அவசியத்தை மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

ஜனநாயகத்தையும் தேர்தல் அமைப்பின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்கத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தீவிரப் போராட்டம் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.