சிக்கன் 65ல மசாலா பத்தல; சமையல் மாஸ்டரை தாக்கிய 4 பேர் கைது

கஞ்சா போதையில் சிக்கன் 65க்கு மசாலா குறைவாக இருந்ததாக கூறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை, சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை,  தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் அகரம் செல்லும்…

கஞ்சா போதையில் சிக்கன் 65க்கு மசாலா குறைவாக இருந்ததாக கூறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை, சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை,  தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் அகரம் செல்லும் பிரதான சாலையில் ராஜா என்பவர் ஃபாஸ்ட் ஃபுட் (துரித உணவகம்) நடத்தி வருகிறார். நேற்று மதியம் காரில் வந்த 5 பேர் உணவகத்தில் பரோட்டா, சிக்கன் ரைஸ், சில்லி சிக்கன் போன்ற உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். இந்நிலையில் உணவுகளை பார்சல் ஆர்டர் செய்ய வந்தவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஊழியர்கள் ஆர்டர் செய்த உணவுகளை பார்சல் செய்து கொண்டிருக்கும் போது, ஒருவர் சமையல் மாஸ்டரிடம் சிக்கன் 65ல் மசலாவே இல்லை என்று கிண்டல் அடித்துள்ளார். மேலும் சிக்கன்ரைஸில் சிக்கனே இல்லை எனவும் கூறி ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது உடன் இருந்த நபர்கள் திடீரென பாஸ்ட் புட் மாஸ்டரை அடித்தனர். இதனால் கடையில் வேலைப் பார்க்கும் நபர்களுக்கும், உணவு வாங்க வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போதை வாலிபர்கள் காரில் இருந்து பட்டாகத்தியை எடுத்துகாட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றனர். மேலும் தப்பி செல்லும் போது ஆர்டர் செய்த உணவினையும் பணம் இல்லாமே எடுத்து சென்று விட்டனர்.

இது தொடர்பாக சிசிடிவி காட்சியுடன் கடையின் உரிமையாளர் ராஜா சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சி மற்றும் காரின் நம்பரை வைத்து மணிகண்டன், ரோகித், அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.