44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் உள்ளூர் விடுமுறை தொடர்பாக அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு ஜூலை 28-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 28 அன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,
அண்மைச் செய்தி: ‘தீபாவளிக்குத் தயாராகும் ஆவின்; ரூ.200 கோடி விற்பனை இலக்கு’
அவர்களின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான ஜூலை 28 அன்று ஒரு நாள் மட்டும் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 27 அன்று சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் பணி நாளாகச் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.









