சென்னை : காவலரிடம் மல்லுக்கட்டிய இளம் பெண் கைது

சென்னையில் காதலன் வீட்டில் தகராறில் ஈடுபட்ட இளம் பெண்ணை தட்டி கேட்க சென்ற காவலரின் சட்டையை அந்த பெண் கிழித்ததோடு, அவரிடம் மல்லுக்கட்டி தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை புதுவண்ணாரப்பேட்டை…

சென்னையில் காதலன் வீட்டில் தகராறில் ஈடுபட்ட இளம் பெண்ணை தட்டி கேட்க சென்ற காவலரின் சட்டையை அந்த பெண் கிழித்ததோடு, அவரிடம் மல்லுக்கட்டி தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர் திருவொற்றியூர் எஸ் பி கோயில் தெரு பகுதியை சேர்ந்த ராகவேந்திரகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

 

இந்நிலையில், திருமணத்திற்கு முன்பாகவே மாப்பிள்ளை வீட்டில் 5 பவுன் தாலி சரடு, இருசக்கர வாகனம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டதால், ராகவேந்திரகுமார் வீட்டில் திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதனை காரணமாக வைத்து, செல்வி அடிக்கடி காதலன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனிடையே, நேற்று மாலை திருவொற்றியூரில் உள்ள காதலன் ராகவேந்திரகுமார் வீட்டிற்கு செல்வி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். உடனே, இது தொடர்பாக அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைமை காவலர் சரவணன் மற்றும் காவலர் இருவரும் செல்வியை சமாதானம் செய்துள்ளனர்.

வீட்டில் இருந்து வெளியே வரும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படியும் கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்க மறுத்த செல்வி காவலர் உடன் தகராறில் ஈடுபட்டு பொய்யான குற்றசாட்டை முன்வைத்து அவர் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணின் கையை காவலர் தட்டி விடவே ஆத்திரமடைந்த செல்வி தலைமை காவலரின் கையை கடித்துள்ளார்..

 

பின்னர் செல்வியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து, காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காகவும், தாக்கிய குற்றத்திற்காகவும் அவர் மீது திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.